சாத்தான்குளம் கொலை வழக்கு; காவல் உதவி ஆய்வாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு..!!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளர் ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், உதவி ஆய்வாளர் ரகு கணேசுக்கு ஜாமின் வழங்ககூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் சிறு கால அவகாசம் வேண்டும் என நீதிபதி முன் முறையிட்டார். இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.