சாத்தான்குளம் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் தாக்கியுள்ளனர்.
படுகாயங்களுடன் அவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்களை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக அந்த சமயத்தில் இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் போலீஸ்காரர்கள் என 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ரகு கணேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர்.
இதில் ரகு கணேஷ் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு சாட்சியை விசாரணை செய்ய ஒன்றரை மாதங்கள் வரை ஆகிறது என சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், ஜாமீன் கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பை வரும் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.