ஆவுடையார்கோவில், திருமயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ஆவுடையார்கோவில், திருமயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள்-முதல்அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள சாலையோரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆவுடையார்கோவிலில் நெடுஞ்சாலை துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆவுடையார்கோவில் பகுதியில் ஒன்றியக்குழு தலைவர் க.உமாதேவி, தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன், உதவி கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் அருண்ராஜ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தனர். இதில் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆவுடையார்கோவில் பகுதியில் 2,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் திருமயம்-மதுரை சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை திருமயம் உதவி கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரபூபதி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பணியாளர்கள் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் தீபா, திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.