மரக்கன்று நடும் விழா
தூத்துக்குடி தருவைகுளத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளை பசுமை பகுதியாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளம் பகுதியிலுள்ள குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பையாக மாற்றி உரங்களாக தயாரித்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலுள்ள தருவைகுளம் குப்பை கிடங்கில் ஒவ்வொரு பகுதியாக மரங்கள் நடப்பட்டு பசுமையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி குப்பை கிடங்கிலுள்ள 15 ஏக்கர் பரப்பளவில் மரங்களை நடுவதற்கு தனியார் நிறுவனம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 6 மாத காலத்தில் இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தற்போது 15 ஏக்கர் பரப்பளவிலும் மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு பெற்று உள்ளது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் தலைமையில் மரக்கன்று நடுதல் நிறைவு விழா நடந்தது. இதில் சமூகஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டினர்.
தொடர்ந்து, மரக்கன்றுகள் நடுவதற்கு பெரிதும் பாடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு மேயர் என்.பி. ஜெகன் பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில் மாநகராட்சி நகர் நல அலுவலர் சுமதி, மாநகராட்சி ஆய்வாளர்கள் ஹரி கணேஷ், ராஜபாண்டி, ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.