கடலூர் டவுன்ஹாலில் வைக்கப்பட்டு இருந்த கட்டில்கள், சானிடைசர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு
கடலூர் டவுன்ஹாலில் வைக்கப்பட்டு இருந்த கட்டில்கள், சானிடைசர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடலூர் மாநகர மையப்பகுதியில் டவுன்ஹால் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த டவுன்ஹால் குறைந்த வாடகைக்கு பொதுமக்களுக்கு சுப நிகழ்ச்சி நடத்துவதற்காகவும், அரசியல் கட்சி கூட்டம் நடத்துவதற்காகவும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் பரவல் அதிகரித்த காலத்தில் படுக்கை, கட்டில், சானிடைசர், முக கவசம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் வந்ததால், அவற்றை இந்த டவுன்ஹாலில் வைத்து பூட்டி பாதுகாக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் ஓய்ந்த நிலையிலும், அந்த பொருட்கள் அனைத்தும் அப்படியே பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் டவுன்ஹாலை வாடகைக்கு எடுக்க முடியாமல் ஏழை, எளிய மக்கள் சிரமப்பட்டு வந்தனர். பொருட்களும் வீணாகும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த பொருட்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கடலூர் டவுன்ஹாலில் இருந்து சிவக்கம், முட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஊழியர்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். குறிப்பாக கட்டில்கள், படுக்கைகள், வாளி, சானிடைசர் ஆகியவற்றை ஊழியர்கள் கொண்டு சென்றனர். இதன் மூலம் டவுன்ஹால் சுத்தம் செய்யப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.