குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
கூடலூர் அருகே கிராமத்துக்குள் இரவில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர் அருகே கிராமத்துக்குள் இரவில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வீடு, வீடாக சேகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு தினமும் நேரடியாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் உள்பட குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் சமவெளியை போல் இல்லாமல் நீலகிரியில் உள்ள பொது இடங்கள் மிகவும் சுகாதாரமாக காணப்படுகிறது. கூடலூர் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கிடங்குக்கு கொண்டு சென்று மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பொது இடங்களில் குப்பைகள் இருப்பது இல்லை.
இரவில் கொட்டப்படும் குப்பைகள்
இந்தநிலையில் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர்வயலில் இருந்து ஏச்சம் வயலுக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் நள்ளிரவில் சிலர் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் கழிவுகளை தின்பதற்காக காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்து வருகிறது. மேலும் கொசுக்களின் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குப்பை கழிவுகளை இரவில் கொட்டி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.