புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள்


புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள்
x

தர்மபுரி மாவட்டத்தில் 14 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார நிலைய கட்டிடங்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 14 இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார நிலைய கட்டிடங்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

சுகாதார நிலைய கட்டிடம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நம்மாண்டஅள்ளியில் துணை சுகாதார நிலையம் மற்றும் காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செவிலியர் குடியிருப்பு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதேபோன்று நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம், செவிலியர் குடியிருப்பு கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாக்களுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி வரவேற்று பேசினார். சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய சுகாதார நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தனர். மேலும் சித்தேரி, கீரைப்பட்டி, சின்னாங்குப்பம், அன்னசாகரம், சிட்டிலிங், பொ.துரிஞ்சிப்பட்டி ஆகிய ஊர்களில் கட்டப்பட்டுள்ள பல்வேறு சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்பட ரூ.4.88 கோடி மதிப்பில் 14 இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் வழங்கினர்.

108 ஆம்புலன்ஸ் திட்டம்

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அப்போது நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தேன். இந்த திட்டத்தை யார் கொண்டு வந்தது என்று பட்டிமன்றமே நடத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பால் உயிர் இழப்புகள் ஏற்படுவது குறைந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க. ஆட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் நமது அரசின் செயல்பாட்டை பாராட்டுகிறார்கள். மருத்துவ சிகிச்சை முறைகள் மேம்பட்டு உள்ளதால் மனிதர்களின் சராசரி வாழும் காலம் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்களை தேடி மருத்துவம்

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழகத்தில் ஒட்டுமொத்த மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் காணொளி காட்சி மூலம் பல திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் உலக அளவில் புகழ் பெற்று உள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவில் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 79 ஆயிரத்து 800 கிராமங்களுக்கும் இந்த 5 ஆண்டுகளுக்குள் செல்ல திட்டமிட்டுள்ளேன். கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகளை 800 அரசு ஆஸ்பத்திரிகள், 900 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 1,700 ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.22 லட்சம் வரை அரசு செலவில் சிகிச்சை பெற முடியும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய 730 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி உள்பட 32 மாவட்டங்களில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story