அணைப்பட்டியில் சாலையை துண்டித்து மணல் அள்ளிய கும்பல்
அணைப்பட்டியில் சாலையை துண்டித்து மணல் அள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றின் கரையில் பிரசித்திபெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேற்கு பகுதியில் வைகை ஆற்றை ஒட்டியவாறு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையை அணைப்பட்டிக்கு வரும் பக்தர்கள், சித்தர்கள்நத்தம், மல்லியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் அந்த சாலையை ஒட்டிய வைகை ஆற்றில் மர்மநபர்கள் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தனர். இதற்கிடையே நேற்று காலை அந்த சாலை சுமார் 20 அடி தூரத்துக்கு துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும் சாலையை ஒட்டிய பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், மணல் அள்ளும் கும்பல் சாலையை துண்டித்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து, மணல் அள்ளும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அணைப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.