குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்
குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் தினமும் ஏராளமான லாரிகள் மூலம் மணல் அனுப்பப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் எடுப்பதற்கு மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஏனெனில் கிராமப்புறங்களில் வீடு கட்டுபவர்களுக்கு தேவையான மணலை ஏற்றிக்கொண்டு தெருப்பகுதிகளுக்குள் லாரிகள் வர முடியாத நிலை இருக்கிறது. ஆகவே மாட்டு வண்டியில் மணல் ஏற்ற அனுமதி வழங்கினால் எளிதாக இருக்கும். இதன் மூலம் எங்களைப்போன்ற தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். எனவே அரசு மணல் குவாரியில் மணல் அள்ளுவதற்கு மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.