சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்


சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

தேர்த்திருவிழா

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழாவின் 12-ம் நாளான நேற்று முன் தினம் இரவு அம்மன் வெண்ணைத்தாலி கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பல்லக்கில் எழுந்தருளினார்.

இந்நிலையில் 13-ம் திருநாளான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு மதியம் 12.01 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க தெப்பக்குளத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார்.

தெப்ப உற்சவம்

தொடர்ந்து தெப்பத்தில் மூன்று முறை அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் தெப்பத்தில் யாரேனும் தவறி விழுந்து விட்டால் அவர்களை மீட்கும் வகையில் சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.


Next Story