ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்; கடை வீதிகளில் களைகட்டிய கூட்டம்


ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்; கடை வீதிகளில் களைகட்டிய கூட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை ேநற்று மும்முரமாக நடந்தது. கடைவீதிகள் களைகட்டின. மதுரை மல்லிகை கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.

மதுரை

இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி நாள் ஆகும்.

பொருட்கள் விற்பனை மும்முரம்

மக்கள் இந்த பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடி, தொழில்-கல்வி மேன்மை பெற வழிபடுவார்கள்.

ஆயுத பூஜை வழிபாட்டுக்கான பொருட்கள் வாங்க நேற்று கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியதால் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. கிராம, நகர வேறுபாடு இன்றி கடை வீதிகள் களைகட்டி இருந்தன.

மதுரை மல்லிகை

மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வாங்க நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் குவிந்தனர்.

கடந்த சில நாட்களாக மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல் சம்பங்கி, அரளி, பிச்சி, முல்லை உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்தது. குறிப்பாக, மதுரை மல்லிகை விலை நேற்று முன்தினம் கிேலா ரூ.800 என இருந்தது. ஆனால், நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது.

பண்டிகையை கொண்டாட பூக்கள் அவசியம் என்பதால், நேற்று காலை முதலே மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து பூவியாபாரிகள் கூறியதாவது:-

தாமரை ஒன்று ரூ.35

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை குறைவாகவே இருக்கிறது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனையானது.

மல்லிகை மட்டுமின்றி பிச்சி ரூ.800, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.800, வாடாமல்லி ரூ.80, தாமரை ஒன்று ரூ.35, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.600, வெள்ளை அரளி ரூ.700, செவ்வந்தி ரூ.250, செண்டு மல்லி ரூ.100, மரிக்கொழுந்து ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.300 என விற்பனையானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூஜை பொருட்கள், காய்கறிகள்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டும் மக்கள் கூட்டத்தால் நேற்று திணறியது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்திருந்தது. குறிப்பாக தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், பீன்ஸ், புடலங்காய் போன்ற காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. தக்காளி மொத்த விலையில் 15 கிலோ எடைகொண்ட பெட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையாது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளியானது ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.60-க்கும், கேரட் ரூ.50-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ.50-க்கும், முருங்கைக்காய்ரூ.80-க்கும், கத்தரிக்காய்ரூ.40-க்கும் விற்பனையானது. மார்க்கெட்களிலும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

இதுபோல், அவல், பொரி கடலை, கொண்டைக்கடலை மற்றும் பூசணிக்காய், குலை வாழை போன்ற ஆயுத பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மாசி வீதிகள், மார்க்கெட்களில் ஏராளமானோர் திரண்டதால் அந்த பகுதி களைகட்டி காணப்பட்டது. இதுபோல், பழ மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

ராமநாதபுரம்-சிவகங்கை

ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர். அதன்படி ராமநாதபுரம் அரண்மனைசாலை, பாரதிநகர், பட்டணம்காத்தான், புதிய பஸ் நிலையம், ராமேசுவரம் கடைத்தெரு, பரமக்குடி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் குவிந்தனர்.

அதேபோல் சிவகங்கையில் நேரு பஜார், அரண்மனை வாசல், காந்திவீதி, காரைக்குடி செக்கடி, கல்லுக்கட்டி, மானாமதுரை பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்திலும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. பூக்கள் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

அருப்புக்கோட்டையில் மல்லிகைப்பூ கிலோ நேற்று ரூ.1,300-க்கு விற்பனையானது. அதேபோல கோழி கொண்டை பூ ரூ.80-க்கும், செவ்வந்திப் பூரூ.240-க்கும், பச்சை ரூ.40-க்கும், மிட்டாய் ரோஸ் ரூ.320-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும், மஞ்சள் ரோஸ் ரூ.360-க்கும், கனகாம்பரம் ரூ.1,600-க்கும், முல்லைப் பூ, பிச்சிப்பூ ரூ.800-க்கும், கேந்திப்பூ ரூ.120-க்கும் விற்பனையானது.

விருதுநகர் பூ மார்க்கெட்டில் பிச்சிப்பூ ரூ.600-க்கும், மல்லிகை ரூ.800 முதல் ரூ.1,200 வரையும், முல்லைப்பூ ரூ.800-க்கும், சிவந்தி 400-க்கும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்திற்கும், ரோஜா கிலோ ரூ.500 ஆகவும் விற்பனையானது.


Related Tags :
Next Story