சேலத்தில் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்,
தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இரவில் இந்த நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதில் வினாடிக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணையின் நீர்மட்டம் 120.12 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை சார்பில் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.