களை கட்டிய பலாப்பழ விற்பனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பலாப்பழ சீசன் விற்பனை களை கட்டி உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பலாப்பழ சீசன் விற்பனை களை கட்டி உள்ளது.
பலா பழங்கள்
மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். இதில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலா பழமாகும். தித்திக்கும் தேன் சுவைதான் இதன் தனிச்சிறப்பாகும். மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவிலும், தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலாப்பழங்கள் அதிகம் விளைகிறது. குளிர்ச்சியுடன் கூடிய வெப்பநிலை இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதால் அதற்கேற்ற பகுதிகளில்தான் பலாப்பழங்கள் அதிகம் விளைகின்றன.
கோடை காலம் தொடங்கினால் பலாப்பழம் சீசன் தொடங்கிவிடும். அந்த வகையில் பலாப்பழங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாத இறுதிவரை விற்பனைக்கு வரும். பலாப்பழங்கள் அதிக சுவை கொண்டதும் மருத்துவ குணம் கொண்டதும் என்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதற்கேற்ப ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாப்பழ சீசன் களை கட்டி உள்ளது. ராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகளில் சரக்கு வாகனங்களில் பலாப்பழங்களை கொண்டு வந்து கொட்டி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
கிலோ 30-க்கு விற்பனை
இது குறித்து பலாப்பழ வியாபாரி ராஜேஷ் என்பவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பலாப்பழ சீசன் சமயங்களில் வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறேன். இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருந்தாலும் காய்கள் பெருக்கவில்லை. நன்கு பெருத்த முதல்தர பழங்கள் மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.. 2-ம் தர பழங்கள்தான் இப்பகுதிக்கு விற்பனைக்கு வருகின்றன.
இந்த பழங்களை புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்று வருகிறேன். ஒரு கிலோ ரூ.30 என விற்பனையாகிறது. விலையில் எந்த ஏற்ற இறக்கமும் இல்லை. அடுத்த மாத இறுதி வரை விற்பனை இருக்கும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை ஓரளவு உள்ளது. அதிக வெயில் என்பதால் மக்கள் பலாப்பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.