ரேஷன் கடைகளில் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனை


ரேஷன் கடைகளில் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனை
x

புதுக்கோட்டையில் ரேஷன் கடைகளில் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

தக்காளி விற்பனை

புதுக்கோட்டை நகராட்சியில் கூட்டுறவுத்துறையின் சார்பில், திருக்கோகர்ணம் அர்பன் அங்காடியில், தமிழக அரசின் மலிவு விலை தக்காளி விற்பனை மற்றும் நிஜாம் காலனி அர்பன் அங்காடியில், மின்னணு பரிமாற்றம் மூலம் பரிவர்த்தனையை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:- புதுக்கோட்டை நகர் பகுதியில் முதல் கட்டமாக 10 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அங்கிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுவதன் மூலம் வெளிச்சந்தைகளில் விலையேற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

குடும்ப அட்டை தேவையில்லை

ஊட்டி டீ தூள் மற்றும் அரசு உப்பு போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்குவது போல ரேஷன் கடைகளில் தக்காளியை பொதுமக்கள் வாங்கலாம். இதற்கு குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. பொதுமக்கள் அருகில் உள்ள தக்காளி விற்பனை செய்யப்படும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று தக்காளியினை பெற்றுக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் தக்காளி விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

மின்னணு பரிமாற்றம்

அதனைத்தொடர்ந்து, நிஜாம் காலனியில் உள்ள ரேஷன் கடையில் மின்னணு பரிமாற்றம் (பேட்டியம்) மூலம் பணம் செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,026 ரேஷன் கடைகள் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 369 ரேஷன் கடைகளில் மின்னணு பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படும்.

ரேஷன் கடைகளில் மின்னணு பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இனி குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து பொருட்களுக்குரிய பணத்தை தங்களது செல்போனில் மின்னணு பரிமாற்றம் மூலம் பணம் செலுத்த முடியும்

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெறும் அனைத்து பொருட்களுக்குரிய பணத்தை எளிமையாக மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தலாம் என்று கூறினார். நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்


Next Story