பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு


பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்தாண்டை விட இந்தாண்டு பூக்கள் விலை 3 மடங்கு அதிகமாக காணப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

ஆயுத பூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்தாண்டை விட இந்தாண்டு பூக்கள் விலை 3 மடங்கு அதிகமாக காணப்பட்டது.

ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை தினத்தன்று தங்களது வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பொருட்களை வைத்து படையல் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஆயுத பூஜை விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்கு வேண்டிய பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சாலையோர பகுதியில் நடை வியாபாரிகள் ஆங்காங்கே பொரி, அவுல், பொரிகடலை, அர்ச்சனை பொருட்கள் உள்ளிட்டவைகளும், சில இடங்களில் வாழை இலை, சிறிய வாழை ஆகியவையும், சில இடங்களில் திருஷ்டி பூசணிக்காய் விற்பனைக்காக நகரில் பல்வேறு இடங்களில் குவியலாக குவிக்கப்பட்டிருந்தன. இந்த திருஷ்டி பூசணிக்காய் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக குவிந்துள்ளது. பூசணிக்காய் கிலோ ரூ.40-க்கு நேற்று விற்பனையானது.

3 மடங்கு அதிகம்

கடந்தாண்டை விட இந்தாண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று பூக்கள் விலை 3 மடங்கு அதிகமாக இருந்தது. சின்ன மாலை ரூ.100-ல் இருந்து 150 வரையும், பெரிய மாலை ரூ.450 வரையும் விற்றது. கடந்தாண்டு மல்லி பூ கிலோ ரூ.800-க்கு விற்பனையான நிலையில் இந்தாண்டு கிலோ ரூ.1500 வரை விலை அதிகமாக காணப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது.

ஆண்டுதோறும் ஆயுத பூஜை தினத்தன்று திருஷ்டி பூசணிக்காயை கடை, விற்பனை நிலையம், வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் ஊழியர்கள் நடுரோட்டில் உடைத்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தர்பூசணி மீது ஏறி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்தது உண்டு. எனவே இந்தாண்டு ஆயுதபூஜையை முன்னிட்டு இன்று இரவு திருஷ்டி பூசணிக்காயை நடுரோட்டில் உடைக்காமல் மாற்று இடத்தில் உடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story