தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை


தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு துறையின் சார்பில் குறிப்பாக ரெயில்வே நிர்வாகம், மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட துறைகளின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளை அவரவர் வீட்டிற்கே சென்று கவுரவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நாடு முழுவதும் அனைவரின் இல்லங்களிலும் நமது நாட்டின் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையொட்டி தேசிய கொடி, மலிவான விலையில் பொதுமக்களை சென்றடைய வேண்டும், தேசிய கொடியின் மதிப்பு ஏற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசிய கொடியை மக்கள் நேரில் சென்று பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கியுள்ளது. விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலக அலுவலர் கம்சு தலைமை தாங்கினார். உதவி தபால் அலுவலர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். தபால் நிலைய உதவி மேற்பார்வையாளர் பிரவீன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தேசிய கொடி விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை மாவட்ட அஞ்சலக முதன்மை முகவர் வீரன் பெற்றுக்கொண்டார். இதில் தபால் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை, கிளை தபால் நிலையங்களிலும் ரூ.25 செலுத்தி தேசிய கொடியை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம், இந்த விற்பனை வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் என தபால் துறை தெரிவித்துள்ளது.


Next Story