பேட்டரி வண்டிகள் மூலம் ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை; அமைச்சர் தொடங்கி வைத்தார்


பேட்டரி வண்டிகள் மூலம் ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை; அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

பேட்டரி வண்டிகள் மூலம் ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் நடைமுறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

ஆவின் நிறுவனம், பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பால் பொருட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இதில், கோடைகாலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் ஐஸ் கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக இந்த பால் பொருட்கள் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் பாலக வளாகத்தில், 'இல்லம் தேடி ஆவின்' என்ற திட்டத்தின் கீழ் பேட்டரி வண்டிகள் மூலம் ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் நடைமுறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பால்வளத்துறை ஆணையர் சுப்பையன், இணை நிர்வாக இயக்குனர் கே.எம்.சரயு, கரூர் வைசியா வங்கியின் சென்னை மண்டல மேலாளர் லட்சுமண மூர்த்தி மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

33 பேட்டரி வண்டிகள்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் 33 பேட்டரி வண்டிகள் மூலம் ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த வண்டிகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கரூர் வைசியா வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது.

ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர்சாதன பெட்டி சேர்த்து இதன் மொத்த விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். இதன் மூலம் குல்பி, ஐஸ் கிரீம் கப், சாக்கோ பார், கசாடா, கேன்டி, பிரீமியம் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 100 வகையான ஐஸ் கிரீம்களை கோடை காலத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்ற இடங்களில் ஆவின் ஐஸ் கிரீம்கள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக பேட்டரி வண்டிகள் மூலம் ஐஸ் கிரீம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story