வாகன இயக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதலுக்கு மரங்களை நட்டு பிராயச்சித்தம் தேட வேண்டும் - சைதை துரைசாமி
தினந்தோறும் ஏராளமான வாகனங்களை இயக்கி பூமியின் சுற்றுச்சூழலை கெடுக்கின்ற நாம் மரங்களை நட்டு, பிராயச்சித்தம் தேட வேண்டும் என்று சைதை துரைசாமி பேசினார்.
கருத்தரங்கம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வனம் அறக்கட்டளை சார்பில் வான்மழை கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நம்மை உயிர் வாழ வைக்கும் பூமிக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்களை இயக்கி பூமியின் சுற்றுச்சூழலை கெடுக்கின்ற நாம் மரங்களை நட்டு பிராயச்சித்தம் தேட வேண்டியது நம் கடமை. அதேபோல பணம், சொத்து சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, உடல் நலனைப் பெறுவது மிக முக்கியம்.
மொழிக்கு இலக்கணம் உள்ளது போல் உடலுக்கும் இலக்கண நெறிமுறைகள் உள்ளன. பொருந்திய உணவும், உணவு உண்ணும் முறையும்தான் உடலுக்கான நெறிமுறைகள். உணவு கிடைத்த போதெல்லாம் சாப்பிடக்கூடாது.
சரியானதெல்லாம் சுவையானதல்ல
சுவை தேடிகளாக நாம் இருக்கும் வரை உடல் நலனை பெற முடியாது. சுவையானதெல்லாம் சரியானதல்ல, சரியானதெல்லாம் சுவையானதல்ல என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து வைத்திருக்க வேண்டும். உணவு உண்பதிலும், நீர் பருகுவதிலும் நெறிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடித்தால் செரிமான கோளாறுகள் ஏற்படாது.
செரிமான கோளாறு இல்லையென்றால், 108 வகையான வியாதிகள் ஏற்படாது என்பதை இன்றைய இளைய சமுதாயம் புரிந்துகொண்டு, வாழ்வியல் பண்புகளாக இவற்றை கடைபிடிக்க வேண்டுமென்றால் பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களில், இந்த பண்புகள் பாடமாக இடம்பெற வேண்டும்.
துரித உணவு கலாசாரம்
இன்றைய தலைமுறையினர் துரித உணவு கலாசாரத்தில் மூழ்கி தங்களது உடல் நலனை கெடுக்கிறார்கள். புகை, மது போன்ற தீய பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களும் இந்த பண்புகளை கடைப்பிடித்தால் நோயற்ற வாழ்வினை பெறலாம். இந்த அடிப்படை பண்புகளை, ஒவ்வொருவரும் பள்ளி பருவத்திலேயே படித்து, கடைப்பிடிக்க வேண்டும். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால் விவசாயிகள் நன்றாக இருப்பார்கள். நாமும் நல்ல உடல் நலத்துடன் நன்றாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.