ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு பயிற்சி
ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். இந்திய கடற்படை விமானதளம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் உச்சிப்புளியில் செயல் பட்டு வரும் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது, ஹெலிகாப்டரை இயக்குவது, கடலின் மேலே தாழ்வாக பறந்து செல்வது, கடலுக்குள் சந்தேகப்படும்படியாக செல்லும் படகுகளை ஹெலிகாப்டர் மூலம் விரட்டி பிடிப்பது, கடலில் உயிருக்கு போராடி தத்தளிப்பவர்களை ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரில் குதித்து பாதுகாப்பாக கயிறு கட்டி மீட்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறித்த பயிற்சி பாம்பன் மண்டபம் கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகின்றது.
இதற்காக 2 ஹெலிகாப்டர்கள் பாம்பன் முதல் மண்டபம் வரையிலான வடக்கு கடல் பகுதியில் சுற்றி வருகின்றன. உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்கள் ஏற்றி வரப்பட்டு ஹெலிகாப்டரில் இருந்து கடற்படை வீரர்கள் கயிறு மூலம் கடலில் குதித்தும் மீண்டும் கடலில் கடலில் இருந்து கடற்படை ரோந்து படகில் ஏறி அதிலிருந்து கயிறு மூலம் ஹெலிகாப்டரில் ஏறுவது போன்ற பாதுகாப்பு பயிற்சியும் நடைபெற்று வருகின்றது.
இந்த பாதுகாப்பு பயிற்சியை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தனர். ஆண்டுதோறும் கடற்படை வீரர்களுக்கு இந்த கடல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு குறித்த பயிற்சி நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.