'தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஜெயமங்கலத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கொல்கத்தாவில் நடந்தது நெஞ்சை உலுக்கக்கூடிய சம்பவம். உயிர்காக்கும் உன்னதமான தொழிலாகிய மருத்துவ தொழிலை மேற்கொண்டு வந்த ஒரு பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லபட்ட சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டன. அதே சமயம், தினந்தோறும் மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வலியோடும், வேதனையோடும் வரும் நோயாளிகளை தாங்கிப் பிடிக்கும் மருத்துவர்களுக்கு அரசாங்கம்தான் துணையாக நிற்க வேண்டும். தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.