தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தீவிரவாத ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கன்னியாகுமரி

தீவிரவாத ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழகத்தின் கடலோர பகுதியில் "சாகர் கவாச் ஆபரேஷன்" என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள்.

அதிநவீன ரோந்து படகுகளில்...

அந்த வகையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் 2 அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதிவரை ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைக்கும் அதிநவீன படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.


Next Story