வாலிபரிடம் ரூ.26¾ லட்சம் மோசடி
திருப்பூரில் ஆன்லைன் வர்த்தகம் என ஏமாற்றி வாலிபரிடம் ரூ.26¾ லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆன்- லைன் வர்த்தகம்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் வர்த்தகம் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற வாசகத்துடன் 'லிங்க்' ஒன்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வந்தது.
அந்த 'லிங்க்கை கிளிக்' செய்துள்ளார். பின்னர் அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலில் ரூ.1,000 முதலீடு செய்துள்ளார். சில நிமிடங்களில் அவருக்கு ரூ.23 ஆயிரத்து 189 கிடைத்துள்ளது. அதன் பிறகு ஆன் லைன் வர்த்தகம் செய்ய முதலீட்டுத்தொகையை அதிகப்படுத்தி ஒவ்வொரு நிலையாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அனைத்து நிலைகளையும் முடித்த பிறகு தான் லாபம் மற்றும் முதலீட்டுத்தொகையை சேர்த்து பெற முடியும் என்று நிபந்தனையும் தெரிவித்துள்ளனர்.
ரூ.26¾ லட்சம் மோசடி
இதற்காக டெலிகிராம் செயலியில் தனி 'குரூப்' தொடங்கியுள்ளனர். அந்த 'குரூப்'பில் அந்த வாலிபர் சேர்ந்து லட்சம், லட்சமாக பணத்தை முதலீடு செய்துள்ளார். கையில் பணம் இல்லாமல் நகையை அடகு வைத்து பணத்தை செலுத்தியுள்ளார். ஆசை அவரின் கண்ணை மறைத்தது.
அதற்கேற்ப லாப தொகையையும் அதிகமாக காட்டியதால் பலரிடம் பணத்தை கடனுக்கு வாங்கி கட்டினார். ஒரு கட்டத்தில் ரூ.26 லட்சத்து 71 ஆயிரத்து 611 செலுத்தியுள்ளார். ஆனால் செலுத்திய பணமும் கிடைக்கவில்லை. அவர்கள் கூறிய லாப தொகையும் கிடைக்கவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
வடமாநிலத்தவர்கள் கைவரிசை
பின்னர் அந்த வாலிபர், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த வாலிபர் செலுத்திய பணம் குஜராத், ராஜஸ்தான், பீகார், அசாம் மாநிலங்களில் உள்ளவர்களின் வங்கிக்கணக்குக்கு சென்றது தெரியவந்தது.
வாலிபர் சேர்ந்த 'டெலிகிராம் குரூப்'பை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த வாலிபரை தவிர மற்றவர்கள் போலி முகவரியுடன் மோசடி நபர்களே சேர்ந்து ஏமாற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
'லிங்கை கிளிக்' செய்யாதீர்
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, 'நன்கு படித்தவர்கள் கூட இந்த மோசடியில் சிக்கிவிடுகிறார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களை குறிவைத்தே இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.
வடமாநிலத்தவர்கள் இந்த மோசடியில் அதிகம் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. செல்போனுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்' என்றனர்.