சுசீந்திரம் அருகே பயங்கரம்: ஓட, ஓட விரட்டி ரவுடி குத்திக்கொலை; அண்ணன் மகன் கைது
சுசீந்திரம் அருகே ரவுடியை ஓட, ஓட விரட்டி சென்று குத்திக் கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே ரவுடியை ஓட, ஓட விரட்டி சென்று குத்திக் கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வீடு பிரச்சினை
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூரை அடுத்த கொத்தன்குளத்தை சேர்ந்தவர் செல்லையா தாஸ். இவருடைய மூத்த மகன் காஸ்டின். இளைய மகன் சுரேஷ் (வயது 45).செல்லையா தாசுக்கு சொந்தமான 2 வீடுகளையும் அவரது மூத்த மகன் காஸ்டின் பராமரித்து வந்தார். இதில் ஒரு வீட்டை தனக்கு தரும்படி சுரேஷ் கேட்டதால் அவருக்கும், காஸ்டினுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன் காஸ்டின், அண்ணி சரஸ்வதி ஆகிய 2 பேரையும் சுரேஷ் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றார். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
குத்திக்கொலை
இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு சுரேஷ், தன்னுடைய அண்ணனான காஸ்டின் மகன் அருண் ஜெனிசுடன் (24) கொத்தன்குளத்தில் உள்ள நூலகத்தில் மது அருந்த சென்றார்.
அப்போது என் பெற்றோரை ஏன் வெட்டினீர்கள் என்று சுரேஷிடம் அருண் ஜெனிஸ் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண் ஜெனிஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷின் வயிறு மற்றும் முதுகில் சரமாரியாக குத்தினார். இதனால் சுரேஷ் அலறி அடித்துக்கொண்டு நூலகத்தில் இருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும் அவரை அருண் ஜெனிஸ் ஓட, ஓட விரட்டி சென்று ஆத்திரம் தீர செங்கலால் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குலில் நிலைகுலைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அருண் ஜெனிஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வாலிபர் கைது
இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து கூலித்தொழிலாளியான அருண் ஜெனிசை போலீசார் தேடினார்கள். அப்போது அங்குள்ள புதருக்குள் அவர் பதுங்கி இருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சுரேஷ் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடியை அவரது அண்ணன் மகனே குத்திக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.