வீண் வதந்திகளை கட்டவிழ்த்துவிடுகிறார்கள்: தமிழ்நாடு அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான மாநிலம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


வீண் வதந்திகளை கட்டவிழ்த்துவிடுகிறார்கள்: தமிழ்நாடு அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான மாநிலம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

வெளி மாநிலத்தவர்கள் குறித்து வீண் வதந்திகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்றும், தமிழ்நாடு அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான மாநிலம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நந்தனம் ஆண்கள் கலைக்கல்லூரியில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, கலையரங்கத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆல்வின் ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள், மாத்திரைகளை தமிழகத்துக்குள் நுழைய விட மாட்டோம். வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள் என்று கற்பனையான கதைகள் சமூக வலைதளங்களில் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமூக வலைதளங்களில் இப்படி திரித்து செய்திகளை வெளியிடுவது தவறு.

அதனை தொடர்ச்சியாக செய்பவர்கள் சிலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தான் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களுக்கு பாதிப்பு இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். உண்மையில் அப்படி அல்ல. இந்தியாவில் இருக்கிற வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில்தான் வெளிமாநிலத்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வெளி மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளின் போது நேரில் வந்து அவரை வாழ்த்தியதை தாங்கிகொள்ள முடியாமல், பொறாமையில் சிலர் வீண் வதந்திகளை கட்டவிழ்த்துவிட்டு கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு.

வைரஸ் காய்ச்சல் பரவி கொண்டிருக்கிறது. இதனை தற்காத்து கொள்ள அடிக்கடி கைகள் கழுவுவது, முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது எப்போதும் தேவைப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்க அரசு ஆஸ்பத்திரி தயாராக உள்ளது. கொரோனா காலத்தில் கடைபிடித்த வழிமுறைகளை தற்போதும் கடைப்பிடித்தால், இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story