ஈரோடு சூரியம்பாளையத்தில் 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
ஈரோடு சூரியம்பாளையத்தில் 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு சூரியம்பாளையத்தில் 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வகுப்பறை கட்டிடம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் சுமார் 1,400 மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு வகுப்பறைகள் கட்டிடம் சிதிலமடைந்ததால் கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளோம். எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
அடிப்படை வசதி
ஈரோடு சூரியம்பாளையம் அன்னை தெரசா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
ஈரோடு பவானிரோடு பகுதியில் வசித்து வந்தோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவுபடுத்தும் பணி காரணமாக அரசு சார்பில் சூரியம்பாளையம் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி தரப்பட்டது. அங்கு 20 ஆண்டுகளாக வசித்தும் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பட்டா வழங்கக்கோரியும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
மின்சார வசதி இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறோம். பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இரவில் மண்எண்ணெய் விளக்கில் படித்து வருகின்றனர். இதேபோல் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.
316 மனுக்கள்
இந்திய விடுதலை போராளி மாவீரன் பொல்லான் வரலாற்று ஆய்வுக்குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தனிநபர் இடங்களில் நடத்தாமல், அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளும்படி பொது இடங்களில் நடத்த வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 316 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி, மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஒருவர் தீக்குளிக்க முயன்றதால், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் அனைவரையும் போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.