பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். அதையடுத்து 2014-ம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. 2017-ம் ஆண்டு ரூ. 700 உயர்த்தப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால் ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். இதையடுத்து ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.10,000-லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.