வியாபாரி வங்கி கணக்கில் ரூ.99 ஆயிரம் அபேஸ்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை


வியாபாரி வங்கி கணக்கில் ரூ.99 ஆயிரம் அபேஸ்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

இட்டமொழியில் வியாபாரி வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் இட்டமொழி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). வியாபாரியான இவர் ஊர் ஊராக சென்று முந்திரிபருப்பு, நவதானியங்கள், வேப்பங்கொட்டை போன்றவற்றை வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வந்தார்.

இவர் திசையன்விளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். சம்பவத்தன்று சக்திவேலின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம், ரூ.49 ஆயிரம் அடுத்தடுத்து எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல்கள் வந்தன.

தனக்கு எந்தவித செல்போன் அழைப்போ அல்லது ஓ.டி.பி. எண்ணோ வராமல் வங்கி கணக்கில் இருந்து இரு தவணைகளாக மொத்தம் ரூ.99 ஆயிரம் எடுக்கப்பட்டதை அறிந்த சக்திவேல் அதிர்ச்சி அடைந்து, திசையன்விளையில் உள்ள வங்கிக்கு நேரில் சென்று புகார் அளித்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். இதுதொடர்பாக சைபர் கிரமை் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தயாநிதி மாறன் எம்.பி.யிடம் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவுடன் இணைப்பை துண்டித்து விட்டார். எனினும் அவரது வங்கி கணக்கில் இருந்துரூ.1 லட்சத்தை மோசடியாக அபேஸ் செய்தனர். அதேபோன்று எந்தவித அழைப்பும் வராமலே சக்திவேலின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரம் எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story