பழனி தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்
பழனி தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இ.பெ.செந்தில்குமார் பேசினார்.
பழனி ஆர்.எப். சாலையில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் நகராட்சி தலைவர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணை செயலாளர் புதுக்கோட்டை விஜயா, தி.மு.க.பேச்சாளர் கவியரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலைமை காலியாக இருந்த நிலையில் முதல் பட்ஜெட்டில் செலவுகளை குறைத்துள்ளது. பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தில் அரசு பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. விரைவில் 2,500 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது.
பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இங்கு ரூ.60 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. பழனி முருகன் கோவில் 2-வது ரோப்கார் திட்ட பணிகளை அடுத்த 1½ ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி தொகுதி மக்களுக்காக ரூ.930 கோடியில் ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.