மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்க வேண்டும்.
வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணை கடல் பகுதிகளில், கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும். இதனால், இரு மாதங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் தடைபடும்.
நடப்பாண்டு மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டு, மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். தொழிலின்றித் தவிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக தமிழ்நாடு அரசு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவு கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில், ரூ.6,000 நிவாரணத் தொகை குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்காது. எனவே, பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே வாழ்ந்து வரும் மீனவர்களின் குடும்ப நலன் கருதி மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணமாக மீனவர்களின் கோரிக்கையான ரூ.8,000 வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யமும் வலியுறுத்துகிறது.
மேலும், படகு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, விசைப்படகு, பைபர் படகுகளைச் சீரமைக்க சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். தண்ணீரில் பயணிக்க முடியாமல், கண்ணீரில் தவிக்கும் மீனவர்களின் துயர்துடைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரை மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.