ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி


ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம்   ரூ.6 லட்சம் மோசடி
x

மருமகனுக்கு வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த காண்டிராக்டர், அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

மருமகனுக்கு வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த காண்டிராக்டர், அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக...

நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் ஜே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). காண்டிராக்டரான இவருக்கு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள முகிலன்விளையை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயண பெருமாள் (62) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது ஜெயக்குமார், அவருடைய மனைவி சுனிதா (37) ஆகிய 2 பேரும் நாராயண பெருமாளிடம் பேசினர். அப்போது உங்களுடைய மருமகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் பணி கிடைக்கும் என்றுள்ளனர். இதனை நம்பிய நாராயண பெருமாள், ஜெயக்குமாரின் மனைவி சுனிதா வங்கி கணக்கில் முதலில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் ரூ.5 லட்சத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார்.

மோசடி

ஆனால் பணத்தை வாங்கிய பிறகு அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் நாராயண பெருமாள் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அப்போது ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு ஏமாற்றியதாக தெரிகிறது. மேலும் தொடர்ந்து பணத்தை கேட்ட போது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து நாராயண பெருமாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். உடனே அவர் இதுகுறித்து விசாரிக்க கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாவுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் காண்டிராக்டர் ஜெயக்குமார், அவருடைய மனைவி சுனிதா மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story