அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.56½ லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.56½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 April 2023 12:58 AM IST (Updated: 18 April 2023 1:27 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரில் போலி கையெழுத்திட்டு பணி நியமன ஆணை வழங்கி ரூ.56½ லட்சம் மோசடி செய்த காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

அரசு வேலை

காஞ்சீபுரம் திம்மசமுத்திரம் திவ்யா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிக்குமார் (வயது 33). இவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இதனால் பிரான்சிஸ் ஜெரால்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அவ்வப்போது வந்து செல்வார். தன்னை அரசு ஊழியர் போலவும், சென்னையில் பணியாற்றுவதாகவும் இங்குள்ளவர்களிடம் கூறி நம்ப வைத்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என கூறியிருக்கிறார். இதில் சென்னை தலைமை செயலகத்தில் டிரைவர் வேலை, இந்து சமய அறநிலையத்துறையில் வேலை, வருவாய்த்துறையில் தாசில்தார் உதவியாளர் உள்ளிட்ட வேலைகள் வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.56 லட்சத்து 55 ஆயிரம் பெற்றிருக்கிறார்.

போலி பணி நியமன ஆணை

இந்த நிலையில் பணம் பெற்ற பின் அவர்களுக்கு பணி நியமன ஆணை போல கடிதத்தை வழங்கினார். இதில் தமிழக அரசின் முத்திரை, தலைமைச்செயலாளர் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் பெயரில் கையெழுத்திட்ட பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார். ஆணை பெற்ற பின்பும் வேலைக்கு அழைக்காததால் பணத்தை கொடுத்தவர்கள் சந்தேகமடைந்தனர். இதில் அந்த பணி நியமன ஆணைகள் போலி என்பதும், அதில் உள்ள கையெழுத்து போலி என்பதும் தெரிந்தது.

இதுகுறித்து மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இந்த மோசடி புகார் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் பாரி தலைமையில் போலீசார் காஞ்சீபுரம் விரைந்து சென்று நேற்று பிரான்சிஸ் ஜெரால்டை கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

முற்றுகையை கைவிட்டனர்

இதற்கிடையில் கடந்த 5-ந் தேதி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனா். அதன்படி போராட்டம் நடத்துவதற்காக புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே நேற்று காலை மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் திரண்டனர்.

மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் வந்திருந்தனர். மோசடி நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை போலீசார் அழைத்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு அரசு வேலைவாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story