திருச்சி பெல் நிறுவன மேலாளரிடம் ரூ.49 லட்சம் மோசடி
திருச்சி பெல் நிறுவன மேலாளரிடம் ரூ.49 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பெல் நிறுவன மேலாளரிடம் ரூ.49 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் இரட்டிப்பு
திருச்சி துவாக்குடி பெல் நிறுவனத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர்கள் ஒரு லிங்க் அனுப்பி உள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய அவர் முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூ.15 ஆயிரம் லாபமாக வந்து சேர்ந்தது. உடனே அந்த பணத்தை அவர் தனது கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டார்.
ரூ.49 லட்சம் மோசடி
அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு தவணையாக ஆன்லைன் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ.49 லட்சம் செலுத்தினார். இந்த தொகைகளை அவர் முதலீடு செய்து ஒவ்வொரு முறை டிரேடிங் செய்யும் போதும் இரட்டிப்பு தொகை வங்கி கணக்குக்கு வந்ததாக அவரது செல்போனுக்கு தகவல் வந்தது. ஆனால் அவரது வங்கி கணக்குக்கு பணம் வந்து சேரவில்லை.
பின்னர் ஒரு கட்டத்தில் அந்த தொகையை மோசடி கும்பல் கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு மாற்றி பெல் அதிகாரியை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பின்னர் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.