ஆன்லைன் சூதாட்டம் மூலம் ரூ.400 கோடி மோசடி: 4 பேர் கைது
ரூ.75 கோடி அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடத்தியுள்ளதாக சென்னை பொறியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை,
கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம் பலரை ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், 'பைவின்' சூதாட்ட செயலி மூலம் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியதும், அவ்வாறு முறைகேடாக ஈட்டப்பட்ட பணத்தை 'பைனான்ஸ்' என்ற சா்வதேச கிரிப்டோ வா்த்தக தளத்தின் மூலம் சீனாவைச் சோ்ந்த நபா்களுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.
அவை சீனாவில் இருந்து செயல்பட்டு வருவது ஐபி முகவரியை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த மோசடியில் தொடர்புடைய சென்னை பொறியாளர் உட்பட நால்வரை சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. ரூ.75 கோடி அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடத்தியுள்ளதாக சென்னை பொறியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ளது.
மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் டெலிகிராம் செயலியின் மூலம் சீனாவில் இருந்து சிலா் தொடா்புகொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் நான்கு பேரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.