2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்-அமைச்சர் வழங்கினார்


2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்-அமைச்சர் வழங்கினார்
x

2 ஆயிரம் திருக்கோவில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ரூ.40 கோடி வைப்பு நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்ய இயலாத கோவில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கோவில் பெயரிலும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் விலைவாசி உயர்வின் காரணமாக பூஜை செலவினத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையை ஈடுகட்டும் வகையில் 2021-22-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "12 ஆயிரத்து 959 கோவில்களுக்கு ஒருகால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருகால பூஜை நடைபெறும் 12 ஆயிரத்து 959 கோவில்களுக்கு ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோவிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி ரூ.130 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக கடந்த ஆண்டு நவம்பரில் வழங்கினார்.

கூடுதல் கோவில்கள்

2022-23-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, ''ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதி வசதி குறைவாக உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதி குறைவாக உள்ள மேலும் 2 ஆயிரம் கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையை, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபாலிடம் தலைமைச் செயலகத்தில் 14-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திர மோகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய பாலங்கள்

தர்மபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தர்மபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையில் அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்;

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் மேச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தொளசம்பட்டி சாலையில், 688.8 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம்;

விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தையும், கடலூர் மாவட்டம் மேல்குமாரமங்கலத்தையும் இணைக்கும் வகையிலும் பெண்ணையாற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், என மொத்தம் ரூ.58.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள3 பாலங்களை தலைமைச்செயலகத்தில் 14-ந்தேதி (நேற்று) முதல்-அமைச்சர் அவர்கள் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளர் பிரதீப் யாதவ் பங்கேற்றனர்.

குழந்தைகள் இல்ல கட்டிடம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் வரும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களின் கட்டிட வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தில் 75 குழந்தைகள் தங்கி பயன்பெறும் வகையில் குழந்தைகள் தங்கும் அறைகள், சமையலறை, உணவுக்கூடம், அலுவலக அறை, பார்வையாளர் அறை, வகுப்பறைகள், பயிற்சி அறை, பல்நோக்கு அறை, கழிவறைகள் மற்றும் குளியலறைகள் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கொண்டதாக இப்புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கூர்நோக்கு இல்லம்

கடலூரில் செயல்பட்டு வரும் அரசினர் கூர்நோக்கு இல்ல கட்டிடத்தில் முதல் தளம் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய தளத்தில் பொழுதுபோக்கு அறை, சிறார்கள் தங்கும் 2 அறைகள், உளவியல் ஆலோசனை அறை, 2 பயிற்சி அறைகள், பதிவறை, குளியலறைகள், கழிவறைகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் ச.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story