தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு அளித்திட வேண்டிய நீரை திறந்து விடாமல், உள்ளூர் பாசனத்திற்கு நீரை திறந்து விடுவதையும், கர்நாடகத்தில் நீர்த்தேக்கங்களில் நீரைத் தேக்கிக் கொள்வதையும் கர்நாடக உள்ள அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
இதனால், மேட்டூர் அணைக்கு நியாயப்படி, நீதிமன்றத் தீர்ப்புப்படி வந்து சேர வேண்டிய தண்ணீர் பெறப்படுவதில்லை. இதன் காரணமாக, டெல்டா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய செயல்.
காவேரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறுவதில்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உறுதியுடன் செயல்பட்டார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அந்த உறுதித் தன்மை தற்போதைய தி.மு.க. அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை.
நடப்பாண்டில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்ளும் பொருட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து ஐந்து இலட்சம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பினை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டனர்.
இருப்பினும், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் வாய்க்கால்களுக்கும், கடைமடைப் பகுதிகளுக்கும் செல்லவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழகத்திற்குரிய நீரை பெற்று தமிழ்நாட்டின் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது 02-07-2023 நாளிட்ட அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தி இருந்தேன்.
அண்மையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கர்நாடக அரசுடன் இதுகுறித்து பேசி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை பெற முயற்சிப்பார் என்று தமிழ்நாட்டு விவசாயிகள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், இதுபோன்றதொரு முயற்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான பயிர்கள் கருகிப் போய், விவசாயிகள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு 65,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், வெறும் 12,000 கன அடி நீர் கர்நாடக அரசால் வெளியேற்றப்படுவது நியாயமற்ற செயல்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு 92,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திருவாரூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரிய ஆறுகளில் தேவையான அளவுக்கு நீர் இல்லாததன் காரணமாக வயல்களில் நீர் வராததால், இந்த இலக்கை எய்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான கர்நாடகத்தின் பருவமழை குறித்து விரிவாக ஆராயாமல், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கிறது என்பதன் அடிப்படையில், ஜூன் 12-ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீரினைத் திறந்துவிட்டதும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழ்நாட்டிற்குரிய நீரை கர்நாடகம் திறந்துவிடாததும்தான் தற்போதைய நிலைக்கு காரணம்.
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில், காவேரியில் தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாக பயிர்கள் கருகியுள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்கவும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீரை விரைந்து பெற்று எஞ்சிய பயிர்களை காப்பாற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.