சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாச்சத்திரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாச்சத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், வடவாளம், தெற்கு செட்டியாப்பட்டி, சொரியன் தெருவைச் சேர்ந்த மாரிக்கண்ணு (வயது 46) க/பெ. ரெங்கசாமி என்பவர் கடந்த 07.08.2024 அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது புதுக்கோட்டை மாவட்டம், அம்மாச்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பலனின்றி 08.08.2024 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் மூளைச்சாவு எற்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த மாரிக்கண்ணுவின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மாரிக்கண்ணுவின் குடும்பத்தினரின் தியாக உணர்வை தமிழ்நாடு அரசு போற்றுகிறது.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story