கோவையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகள் அனுப்பியதில் ரூ.3¼ கோடி மோசடி
கோவையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.3¼ கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இங்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் இருந்து கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன. அவை, அங்குள்ள பணபாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி ரூ.70 கோடியே 40 லட்சம் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி அதிகாரிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தனர். அதை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சரிபார்த்தனர். அதில் ரூ.3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 800 குறைவாக இருந்து உள்ளது.
3¼ கோடி ரூபாய் நோட்டுகள்
இதுகுறித்து அவர்கள், கோவையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து மண்டல உதவி பொதுமேலாளர் காகடாய் மற்றும் வங்கி அதிகாரிகள் அந்த வங்கியில் உள்ள பணபாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கனகராஜ் என்பவர் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வேறு இடத்துக்கு மாற்றி வைத்த காட்சி பதிவாகி இருந்தது. இதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
6 பேர் மீது வழக்கு
இதுகுறித்து சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் ராஜன், ஊழியர்கள் செல்வராஜன், ஜெயசங்கரன், ஸ்ரீகாந்த், பணபாதுகாப்பு மைய பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் உள்பட 6 பேரும் சேர்ந்து ரூ.3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 800-ஐ மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி மேலாளர் உள்பட 6 பேர் மீதும் கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.