வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள சரட்டான்பட்டியை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). யோகா ஆசிரியரான இவர், வேலை தேடி வந்த நிலையில், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வரும் வாத்தலை அருகே உள்ள கட்டிட தொழிலாளியான நெய்வேலியைச் சேர்ந்த வினோத் (33) என்பவர் அறி்முகமானார். அப்போது, தான் பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நடனம் கற்றுத்தருவதால் யோகா ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.இதை நம்பிய சதீஷ்குமார், வினோத் கேட்கும் போதெல்லாம் 2021-22 கால கட்டங்களில் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் வரை வங்கி கணக்கு மற்றும் நேரில் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோத்தை சந்தித்து சதீஷ்குமார் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்து பணத்தை தர மறுத்துவிட்டார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். மேலும் அவர் சரட்டான்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (60) என்பவரிடமும் அவரது மகன், பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.4.68 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. வினோத் இதுவரை ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.