போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 5 நாட்களில் 2,631 வழக்குகளில் ரூ.20 லட்சம் அபராதம் வசூல் - ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்


போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 5 நாட்களில் 2,631 வழக்குகளில் ரூ.20 லட்சம் அபராதம் வசூல் - ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்
x

போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 5 நாட்களில் 2,631 வழக்குகளில் ரூ.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தலின்படி ஆவடி மாநகர போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று மாலை ஆவடி காமராஜர் சிலை சந்திப்பில் பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும், தற்போது போக்குவரத்து விதிமுறை கட்டணங்கள் பற்றியும் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டும், உயிர் சேதங்களை தடுக்கும் பொருட்டும் மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அபராத தொகை உயர்த்தப்பட்டது. அபராத தொகை அதிகப்படுத்தியதின் முக்கிய நோக்கம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துகளை தடுக்கவும், விபத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதும் ஆகும்.

வாகன விபத்து நடைபெறுவதற்கான காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அபாயகரமாக முந்திச்செல்வது, அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டுவது, நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தி வைப்பது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சாலை சந்திப்புகளில் சிக்னலை மீறுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது ஆகியவற்றால் வாகன விபத்துகள் நடைபெறுகிறது. ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் 1-1-2022 முதல் இதுவரை முக்கிய சாலைகளில் சாலை வாகன இறப்பு வழக்குகள் 314 மற்றும் இறப்பு அல்லாத காய வழக்குகள் 972 பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் 735, பாதசாரிகள் 217 பேர் மற்றும் தனக்குத்தானே விபத்து ஏற்படுத்திக்கொண்டவர்கள் 240 பேர் ஆகும்.

இந்த விபத்துகளில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களே அதிகமாக விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த 27-ந் தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளால் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக இதுவரை 2 ஆயிரத்து 631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் புதிய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்தை மதித்து புதிய போக்குவரத்து அபராத கட்டண விதிகளை கடைபிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு ஆவடி போலீஸ் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story