செல்போன் உதிரிபாகங்கள் வாங்க வந்த பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறிப்பு
செல்போன் உதிரிபாகங்கள் வாங்க வந்த பெண்ணிடம் ரூ.2¾ லட்சம் பறிக்கப்பட்டது.
செல்போன் சர்வீஸ் கடை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சிவன்குடியேற்று பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவருடைய பெரியப்பா மகன் குருபரன் (32). ரேணுகா செல்போன் சர்வீஸ் குறித்த பாடத்தை படித்து இருந்ததால் இவர்கள் ஊரில் சொந்தமாக செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைக்க திட்டமிட்டனர். இதற்காக செல்போன் உதிரிபாகங்கள் வாங்க ஆன்லைன் மூலம் விசாரித்துள்ளனர்.
அப்போது திருச்சியில் உள்ள ஒருவரது செல்போன் எண்ணை கண்டு அந்த நபருக்கு போன் செய்து பேசி உள்ளனர். அந்தநபரும் குறைந்த விலையில் உதிரிபாகங்களை தருவதாகவும், சுமார் ரூ.3 லட்சத்துடன் திருச்சிக்கு வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து ரேணுகாவும், குருபரனும் பணத்துடன் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி நேற்று பகல் திருச்சி வந்தனர்.
ரூ.2¾ லட்சம் பறிப்பு
திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்ததும் இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி வில்லியம்ஸ்ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது பணம் சிறிது குறைவாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மிற்கு சென்று ரூ.38 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் ஏ.டி.எம்.மில் இருந்து வெளியே வந்த அவர்கள் ஏற்கனவே தாங்கள் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தமாக ரூ.2¾ லட்சத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு நடந்து சென்றனர். அங்கு வந்த 2 பேர் ரேணுகா மற்றும் குருபரனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே நடந்து சென்றனர்.
திடீரென 2 பேரும் ரேணுகாவிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அங்கு தயார்நிலையில் இருந்த கருப்புநிற காரில் ஏறி தப்ப முயன்றனர். அந்த காரில் மேலும் 3 பேர் இருந்தனர். உடனே சுதாரித்து கொண்ட குருபரன் காரை பிடித்து கொண்டே ஓடினார். அந்தசமயம் அவர்களது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு காரின் மீது மோதியது. இதனால் காரை மேற்கொண்டு ஓட்ட முடியவில்லை. உடனே காருக்குள் இருந்த 3 பேர் பணத்துடன் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
ஆட்டோ டிரைவர் விரட்டி பிடித்தார்
இதற்கிடையே சத்தம் கேட்டு அங்குள்ள டீக்கடை அருகே நின்ற உறையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா ஓடிவந்து கார் அருகே பார்த்தார். அப்போது காரில் இருந்து இறங்கி ஓடிய மற்றொருநபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். இதற்கிடையே காரின் அருகே எதுவும் தெரியாததுபோல் நின்ற மற்றொரு நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் உடனடியாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் அங்கு சென்று பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த முகமதுஅன்சர், மதுரையை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரியவந்தது. இதில் முகமதுஅன்சர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருந்ததும் தெரியவந்தது.
தப்பி ஓடிய 3 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பணத்தை பறிகொடுத்த ரேணுகா, குருபரன் ஆகியோரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். மேலும், பணத்துடன் தப்பி சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள். திருச்சியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மத்திய பஸ் நிலையம் அருகே சினிமா பாணியில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.