கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் பதிவு - குடும்பத் தலைவிகள் புலம்பல்


கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் பதிவு - குடும்பத் தலைவிகள் புலம்பல்
x

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பித்த கூலித் தொழிலாளிகள் குடும்பத்தினரின் விண்ணப்பங்களிலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக குடும்பத் தலைவிகள் புலம்புகின்றனர்.

சென்னை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதே நேரத்தில், 56½ லட்சம் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. தாங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்பது தெரியாமல் குழப்பத்தில் தவித்த குடும்பத் தலைவிகளுக்கு தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

இந்த இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்து, என்ன காரணத்திற்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருந்தது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களுக்கு தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்த குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டு வருகிறது. இதில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், ரூ.1,000 வங்கி கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள் கடந்த 2 நாட்களாக இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் குவிந்து வருகின்றனர்.

அங்கு சென்று தங்கள் விண்ணப்பங்கள் ஏன்? நிராகரிக்கப்பட்டு உள்ளது என்ற விவரத்தை தெரிந்து கொள்வதற்காகவும், மேல்முறையீடு செய்வதற்கும் முண்டி அடிக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்களின் விண்ணப்பங்கள் ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் வருமானத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதில், ஏராளமான கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் ஆண்டு வருமானமாக ரூ.2½ லட்சம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குடும்பத் தலைவிகள் புலம்புகின்றனர்.

இது குறித்து சென்னை பல்லவன் சாலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த லட்சுமி (வயது 57) கூறும்போது, 'நான் எனது கணவருடன் வசித்து வருகிறேன். அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கிறார். எனது மகன் கூலி வேலை பார்க்கிறான். அவனும் திருமணமாகி தனியாகத் தான் வசித்து வருகிறான். ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்த எனது விண்ணப்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்' என்று கூறினார்.

சென்னை ராயபுரம் அப்பாவு தெருவை சேர்ந்த சாஹிதா ( 63) கூறும்போது, 'எனது கணவர் இறந்துவிட்டார். நான் மட்டும் தனியாகத் தான் வசித்து வருகிறேன். இதுவரை விதவை ஓய்வூதியமோ, முதியோர் ஓய்வூதியமோ எனக்கு வழங்கப்படவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலாவது மாதம் ரூ.1,000 கிடைக்கும் என்று விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். நான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். ஆனால், எங்கள் வீட்டின் அருகே 4-க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளவர்களுக்கு கூட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1,000 கிடைத்துள்ளது. விதவை பெண் எனக்கு கிடைக்கவில்லை' என்று வருத்தத்துடன் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களிலும், இதர மாவட்டங்களில் தாலுகா அலுவலகங்களிலும் இயங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் தகுதி உடைய குடும்பத்தலைவிகள் மேல்முறையீடு செய்து கொள்வதற்காக கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், ஒரே நேரத்தில் அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துவதால், இணையதளமும் முடங்குகிறது.

இது குறித்து உதவி மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கூறும்போது, 'விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்ய ஒரே நாளில் அனைவரும் வந்து குவிகின்றனர். ஆனால், இணையதளத்தில் ஒரு நாளைக்கு சுமார் 40 பேருக்கு மட்டுமே மேல்முறையீடு செய்ய முடிகிறது. மற்றவர்களை வரும் நாட்களில் வந்து மேல்முறையீடு செய்யுமாறு கூறுகிறோம்' என்றார்.

இதே போன்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளவும், எஸ்.எம்.எஸ். வராதவர்கள் வங்கிகளுக்கு சென்று எஸ்.எம்.எஸ். சேவை கோரி விண்ணப்பிக்கவும் வங்கிகளிலும் குடும்பத் தலைவிகளின் கூட்டம் அலைமோதுகிறது.


Next Story