மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக தேனியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மின்வாரியத்தில் வேலை
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). இவர், திண்டுக்கல்லில் ஒரு வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மகள் பிருந்தா கார்த்திகா. இவர், பட்டப்படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (40) என்பவர், பாஸ்கருக்கு அறிமுகம் ஆனார். அப்போது பாஸ்கர் தனது மகள் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருவதை தெரிவித்தார்.
இதனையடுத்து முத்துப்பாண்டி, தமிழ்நாடு மின்வாரியத்தில் உயர் அதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்றும், அதன்மூலம் பாஸ்கரின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறி இருக்கிறார். அதற்கு பணம் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
ரூ.15 லட்சம்
இதனை உண்மை என நம்பிய பாஸ்கர், 3 தவணைகளாக ரூ.15 லட்சத்தை முத்துப்பாண்டியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்று கொண்ட முத்துப்பாண்டி வேலை வாங்கி கொடுக்காததால், பாஸ்கர் ஏமாற்றம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டியை தொடர்பு கொண்ட பாஸ்கர் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். எனினும் பணத்தை திரும்ப கொடுக்காமல் முத்துப்பாண்டி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் விரக்தி அடைந்த பாஸ்கர், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கோவையில் கைது
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை தேடி வந்தனர். இதற்கிடையே முத்துப்பாண்டி கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கோவை சென்று முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை, தேனி உள்பட பல ஊர்களில் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்து சுருட்டியதும், இதுதொடர்பாக பல்வேறு ஊர்களில் முத்துப்பாண்டி மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.