ரூ.1.45 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
வள்ளியூர் யூனியனில் ரூ.1.45 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியனில் ரூ.1.45 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
திட்டப்பணிகள்
வள்ளியூர் யூனியன் ஆவரைகுளத்தில் ரூ.34 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டவும், பழவூரில் ரூ.38 லட்சத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டவும், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சத்தில் நூலக கட்டிடம் கட்டவும், சங்கனாபுரம், செட்டிகுளம், வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ரூ.19.15 லட்சத்தில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிஜன் லைன் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் தொடக்க விழா அந்தந்த இடங்களில் நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் திட்டப்பணி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற ஓராண்டில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 360 கிராமங்கள் மற்றும் 3 நகர பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.352 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவடையும். அப்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு சீராக தண்ணீர் வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து கடலில் வீணாகும் கலக்கும் தண்ணீரை மின் நிரேற்றும் திட்டத்தின் மூலம் ராதாபுரம் பகுதிக்கு கொண்டு வர சிறப்பு திட்ட நிதியின்கீழ் நிதி ஒதுக்க முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரான், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், யூனியன் கன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.