ரூ.1,300 கோடி மோசடி வழக்கு: தனியார் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்
ரூ.1,300 கோடி மோசடி வழக்கு: தனியார் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்.
கோவை,
கோவை அடுத்த சூலூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவை பீளமேட்டில் யு.டி.எஸ். என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினார். சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன.
இந்த நிதி நிறுவனத்தில் சுமார் 76 ஆயிரம் பேர் ரூ.1,300 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமேஷ் கடந்த 6-ந் தேதி கோவை டேன்பிட் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளதுடன், ரூ.4 கோடி மதிப்பிலான வீடு, இடம் உள்ளிட்ட சொத்துகளை கையகப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மோசடியில் ரமேசுக்கு உதவியாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.