சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி போதை பவுடர் பறிமுதல்- வெளிநாட்டு பெண் கைது
சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி மதிப்புள்ள போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வெளிநாட்டு பெண்ணை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த அங்கோலா நாட்டை சேர்ந்த பிபியனா டா கோஸ்டா (வயது 59) என்ற பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர், சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் விலைஉயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.11 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 183 கிராம் கொக்கைன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கோலா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ரூ.100 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் ஹெராயின் போதை பொருள் பிடிபட்டது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கொக்கைன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.123 கோடி மதிப்புள்ள கொக்கைன், ஹெராயின் பிடிபட்டு வெனிசூலா நாட்டு பெண், அங்கோலா நாட்டு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.