போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி - சென்னையில் 2 பேர் கைது
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று பெண்ணிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 70). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் சென்னையில் நிலம் வாங்க முடிவு செய்தேன். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (55) என்பவர் என்னிடம் அறிமுகமானார். அவர் வளசரவாக்கம் பகுதியில் 2,400 சதுர அடி காலிமனை நிலத்தை என்னிடம் காட்டி எனக்கு விற்பனை செய்தார். இதற்காக ரூ.1½ கோடி என்னிடம் வாங்கினார். அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது. போலி ஆவணங்களை காட்டி அந்த நிலைத்தை எனக்கு விற்பனை செய்து என்னிடம், ரூ.1½ கோடியை மோசடி செய்துவிட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக சுப்பிரமணியன் மற்றும் மதுரையைச் சேர்ந்த முத்து (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.