அடகுக்கடை சுவரில் துளையிட்டு ரூ.1¼ கோடி நகை கொள்ளை
அடகுக்கடையின் சுவரில் துளையிட்டு ரூ.1¼ கோடி மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள சேர்க்காடு கூட்ரோட்டில், மேல்பாடியை சேர்ந்த அனில் குமார் (வயது 29) என்பவர், நகை அடகுக்கடை மற்றும் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, மேல்பாடிக்கு சென்றுவிட்டார்.
பின்னர் 2 நாட்கள் கடைக்கு விடுமுறை விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவருடைய அடகுக்கடை சுவரில் ஓட்டை போடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளருக்கு, பக்கத்து கடைக்காரர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அனில் குமார் மற்றும் அவரது தந்தை பாண்டுரங்கன் ஆகியோர் விரைந்து வந்து, கடையை பார்த்தனர்.
நகை திருட்டு
உடனடியாக திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகைக்கடையை பார்வையிட்டனர்.
அப்போது கடையின் பின்பக்க காங்கிரீட் சுவரை மர்ம நபர்கள் உடைக்க முயன்று முடியாததால் பக்கத்தில் உள்ள குளிர்பான கடை சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு, அதிலிருந்து ஹார்ட் டிஸ்க்கை திருடி உள்ளனர். மேலும் கடையில் இருந்த ராட்சத இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான அடகு நகைகள், விற்பனைக்கு வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.30,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ1 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் பீரோவை உடைக்க கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகுக் கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.