முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு ரூ1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாது:-
கல்வி உதவித்தொகை
முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. கல்வி நிதியுதவி ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம், தொழிற்கல்வி படிப்பிற்கு ரூ.20 ஆயிரம், பட்டப்படிப்பிற்கு ரூ.10 ஆயிரம், பிரதமரின் கல்வி நிதிஉதவியின் கீழ் முதல் ஆண் சிறுவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், பெண் சிறுமிகளுக்கு ரூ.36 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி படிக்கும் முன்னாள் படைவீரரின் வாரிசுதாரர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொடிநாள் நிதி
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இந்த ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதி ரூ.35 லட்சத்து 2 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கை மிஞ்சும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் கொடிநாள் நிதி வசூல் செய்து தாராளமாக அளித்திட வேண்டும். மேலும் இந்த குறைகேட்பு கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 9 மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவி
தொடர்ந்து 5 முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் திருமணம் மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அருள்மொழி, கலைக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.