திருவள்ளூர் அருகே சீட்டு நடத்தி ரூ.1¾ கோடி மோசடி; கணவன்- மனைவி கைது


திருவள்ளூர் அருகே சீட்டு நடத்தி ரூ.1¾ கோடி மோசடி; கணவன்- மனைவி கைது
x

திருவள்ளூர் அருகே சீட்டு நடத்தி ரூ.1¾ கோடி மோசடி செய்த கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியை ேசர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 44). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (41). அந்த பகுதியில் மஞ்சுளாவின் உறவினர் விக்னேஸ்வரி என்ற அம்மு வசித்து வந்தார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலச்சீட்டு, நகை பண்டு, மளிகை பண்டு, கடன் கொடுப்பது ஆகிய சீட்டுகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.

அவர்களிடம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த நம்பி விஜயகுமார் உள்பட சுமார் 350 பேர் 7 ஆண்டுகளாக சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சீட்டு செலுத்திய யாருக்கும் இவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சீட்டு கட்டி வந்த அனைவரும் அவர்களிடம் பணத்தை கேட்டனர். அதற்கு விஜயக்குமார் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா பிறகு தருகிறோம் என கூறினர்.

ஆனால் கடந்த 4-ந் தேதி இரவோடு இரவாக மஞ்சுளா மற்றும் அவரது கணவர் பிரேம்ஆனந்த் மற்றும் மஞ்சுளாவின் உறவினரான விக்னேஷ்வரி என்கிற அம்மு ஆகியோர்கள் வீட்டை பூட்டிவிட்டு பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு தலைமறைவாகினர். வீடு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சீட்டு பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்போனில் தொடர்பு கொண்டும் பயனில்லை.

இதையடுத்து சீட்டு பணம் கட்டி ஏமாந்த விஜயகுமார் உள்பட 350 பேர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவில் புகார் கொடுத்தனர்.

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவில் சீட்டு மற்றும் கந்துவட்டி பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தம்பதி மற்றும் விக்னேஸ்வரி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தனிப்படை போலீசார் மயிலாடுதுறையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த மஞ்சுளா மற்றும் அவரது கணவர் பிரேம் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் விஜயகுமார் உள்ளிட்ட 350 பேர்களிடம் ரூ.1 கோடியே 87 லட்சத்து 54 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள விக்னேஸ்வரியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story