ஆக்கூர் முக்கூட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா?


ஆக்கூர் முக்கூட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
x

விபத்துகளை தடுக்க ஆக்கூர் முக்கூட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

விபத்துகளை தடுக்க ஆக்கூர் முக்கூட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இது மயிலாடுதுறை, சீர்காழி, சின்னங்குடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய நான்கு வழி சந்திப்பு சாலையாகும்.

இந்த சாலையின் வழியாக சீர்காழி சென்று அங்கிருந்து சிதம்பரம், கடலூர், சென்னை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கும், மயிலாடுதுறை வழியாக சென்று கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கும் செல்ல முடியும்.

பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்

இந்த ஊர்களுக்கு செல்வோரும், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, பூம்புகார், பொறையாறு, திருக்கடையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் இந்த சாலையின் வழியாக தான் சென்று வருகின்றனர். மேலும் தரங்கம்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் பல்வேறு பணிகள் தொடர்பாக செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

ஆக்கூர் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவிடைக்கழி முருகன் கோவில், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது பகவான் கோவில், பூம்புகார் பகுதியை சுற்றியுள்ள பஞ்ச நரசிம்மர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்களும் அதிகளவில் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலையின் வழியாக தினமும் கார், வேன், பஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் போது அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

ரவுண்டானா அமைக்க வேண்டும்

நடந்து செல்பவர்களும் அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தவிர்க்க ஆக்கூர் முக்கூட்டில் ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story